தஞ்சாவூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி-திருவையாறு பைபாஸ் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ள திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவிற்கான ஏற்பாடுகளின் போது பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. இந்த விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க இருந்ததால், திருமண மண்டபத்தின் அருகே இரும்பு குழாய்களில் திமுக கொடிகளை ஊன்றும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக இரும்பு குழாய் மேலே சென்ற உயரழுத்த மின்சார கம்பியில் உரசியுள்ளது.
இதில் மின்சாரம் தாக்கி சேலத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் கோகுல் ஆகிய இரண்டு தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்டனர். அங்கிருந்த காவல்துறையினர் அவர்களை மீட்டு உடனடியாக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தமிழ்ப்பல்கலைக்கழக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். துணை முதல்வரின் வருகைக்காக மேற்கொள்ளப்பட்ட பணிகளின் போது நிகழ்ந்த இந்த உயிரிழப்பு அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
