கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கத்தை விமர்சித்து வந்த பஞ்சாபி பெண் யூடியூபர் நான்சி கிரிவால் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 4, 2026 அன்று ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள லாசாலே பகுதியில் அவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

மேலும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். நான்சி கிரிவால் தனது சமூக வலைதளப் பக்கங்களில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராகவும், இந்தியாவிற்கு ஆதரவாகவும் தொடர்ந்து கருத்துகளைப் பதிவிட்டு வந்தவர் என்பதால், இது திட்டமிடப்பட்ட கொலையாக இருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால் காவல்துறையினர் இச்சம்பவத்தை ஒரு ‘தனிப்பட்ட தாக்குதல்’ என்று வகைப்படுத்தியுள்ளனர். இருப்பினும், இந்த கொலையின் பின்னணியில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நான்சிக்கு ஏற்கனவே கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், கனடாவில் இந்திய வம்சாவளியினரின் பாதுகாப்பு குறித்த அச்சம் மீண்டும் அதிகரித்துள்ளது. இச்சம்பவம் கனடா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், சுதந்திரமான கருத்துப் பதிவிற்கு விடப்பட்ட அச்சுறுத்தலாகவும் பார்க்கப்படுகிறது.