உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், ஒரு நகைக்கடையில் புகுந்த இரண்டு கொள்ளையர்கள் சுமார் 20 கிராம் தங்க நகைகளைத் திருடிக்கொண்டு தப்ப முயன்றனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில், அந்தக் கடையின் உரிமையாளரின் 18 வயது மகள், கொள்ளையர்களை விரட்டிச் சென்றார். சினிமா பாணியில் நடுரோட்டில் கொள்ளையனை வழிமறித்த அந்தப் பெண், அவனுடன் ஆக்ரோஷமாகப் போராடினார். கொள்ளையன் ஆயுதங்களால் தாக்கியதில் அந்தப் பெண்ணுக்குக் காயம் ஏற்பட்ட போதிலும், சிறிதும் அஞ்சாமல் அவனது சட்டையைப் பிடித்து மல்லுக்கட்டிய துணிச்சல் அங்கிருந்தோரை வியப்பில் ஆழ்த்தியது.

​இந்தக் கடுமையான மோதலில், அந்தப் பெண் காயமடைந்ததைப் பயன்படுத்தி கொள்ளையன் தப்பிச் சென்ற போதிலும், பட்டப்பகலில் ஒரு இளம்பெண் கொள்ளையர்களைத் தனியாக எதிர்கொண்ட விதம் தற்போது நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிறது. “தைரியம் என்பது ஆயுதத்தில் இல்லை, நெஞ்சில் இருக்கிறது” என அந்தப் பெண்ணை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், துணிச்சலாகச் செயல்பட்ட அந்தப் பெண்ணுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.