உடல்நலக் குறைபாடு காரணமாக சிகிச்சை அல்லது பரிசோதனை மையங்களுக்குச் செல்லும் பெண்கள், அங்கு முழுமையான பாதுகாப்பும் நம்பிக்கையும் இருக்கும் என்றுதான் நம்பிச் செல்கின்றனர். ஆனால், அந்த நம்பிக்கையைப் பொய்யாக்கும் விதமாக, தலைநகர் சென்னையின் கொளத்தூர் ரெட்டேரி பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் சி.டி. ஸ்கேன் மையத்தில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

​புழல் பகுதியைச் சேர்ந்த 47 வயதுப் பெண் ஒருவர், வழக்கமான சி.டி. ஸ்கேன் எடுப்பதற்காக அந்த மையத்திற்குச் சென்றபோதுதான் இந்த எதிர்பாராத கொடூரத்தை எதிர்கொண்டார். அவருக்கு ஸ்கேன் எடுத்துக் கொண்டிருந்த சமயத்தில், பணியில் இருந்த ஜில் கவின் என்ற இளைஞர், அந்தப் பெண்ணின் தனிமையைப் பயன்படுத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில், ராஜமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, இளைஞர் ஜில் கவினைக் கைது செய்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் மட்டுமல்லாமல், மருத்துவ மற்றும் ஸ்கேன் மையங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது.