இயக்குனர் நந்தா தற்போது நெடுமி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரதீப் செல்வராஜ் ஹீரோவாக நடித்துள்ள நிலையில் அபிநயா ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தின் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்ற போது இயக்குனர் பேரரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, பனை மரத்தின் சிறப்புகளை மையமாக வைத்து நெடுமி என்ற திரைப்படம் உருவாகியுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. பனை மரத்துக்கு பல சிறப்புகள் இருக்கிறது. அந்த வகையில் பனை மரத்தின் எல்லா பாகங்களும் பயன்பாட்டுக்கு உகந்தவை.

அந்த காலத்தில் பனை மரத்திலிருந்து வரும் கள் விற்பனை கடையை தெருவுக்கு ஓரமாக வைத்தார்கள். ஆனால் தற்போது தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடை வந்துவிட்டது. உடலுக்கு கேடு விளைவிக்கும் மதுபானத்தை விட உடலுக்கு நன்மை தரும் கள் குடிப்பது மேல். இதில் சிறிய அளவில் போதை இருக்குமே தவிர உடல் நலத்திற்கு எவ்வித கேடும் இருக்காது. எனவே டாஸ்மாக் கடையில் ஒரு குறிப்பிட்ட விலையை நிர்ணயம் செய்து கள் விற்பனை செய்யலாம். மேலும் இதன் மூலம் பனை மர தொழிலை நம்பியிருப்பவர்களின் வாழ்வாதாரமும் முன்னேறும் என்று கூறினார்.