ஜிம் உரிமையாளரான கபில் என்பவர் ஒரு பொது இடத்தில் நின்று கொண்டிருந்தபோது, இந்த கொடூரமான தாக்குதல் அரங்கேறியுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த இருவரில் ஒருவர், கபிலின் தலைக்குப் பின்புறமாகத் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். வெறும் 5 வினாடிகளில் சுமார் 10 முறை குண்டுகள் பாய்ந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த அதிர்ச்சியூட்டும் துப்பாக்கிச் சூடு சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இந்தத் தாக்குதலின் போது அங்கிருந்த ஒரு இளம் பெண்ணும் துப்பாக்கிச் சூட்டுக் காயம் அடைந்துள்ளார். அவர் உடனடியாக மீட்கப்பட்டு ஹிசாரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் குற்றவாளிகள் தங்களின் அடையாளத்தை மறைக்க ஹெல்மெட் அணிந்திருந்ததால், காவல்துறை அந்த சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் கொலையாளிகளை அடையாளம் காணும் பணியிலும், அவர்களைத் தீவிரமாகத் தேடும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
