ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவைத் தொடர்ந்து, அந்த நாட்டின் மிக உயரிய பதவியான ‘உச்ச தலைவர்’ (Supreme Leader) நாற்காலியில் அடுத்து அமரப்போவது யார் என்ற விவாதம் உலக அரங்கில் சூடுபிடித்துள்ளது. புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரை, ஈரானின் சட்டப்படி ஒரு தற்காலிகத் தலைமைக் குழு ஆட்சியை வழிநடத்தும். ஈரான் சட்டப்படி, புதிய உச்ச தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை ‘தலைமைத்துவ குழு’ நாட்டின் அதிகாரங்களைக் கவனிக்கும்.
இந்தத் தற்காலிகக் குழுவில், தற்போதைய அதிபர் மசூத் பெஷேஷ்கியன், நீதித்துறை தலைவர் கோலம்ஹோசைன் மொஹ்சேனி எஜேய், கார்டியன் கவுன்சில் உறுப்பினர் ஒருவர் ஆகியோர் இடம்பெறுவர். வல்லுநர்கள் சபை கூடிய விரைவில் நிரந்தர உச்ச தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது விதியாகும்.
அடுத்த உச்ச தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் ‘வல்லுநர்கள் சபை’ மற்றும் ‘கார்டியன் கவுன்சில்’ ஆகிய அமைப்புகளின் பங்கு முக்கியமானது. இதில் முன்னிலையில் இருப்பவர்கள்:
1. மொஜ்தாபா கமேனி (மறைந்த உச்ச தலைவரின் மகன்):
தற்போது இவரே அடுத்த தலைவராகத் தேர்வாக அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. ஈரானின் பலம் வாய்ந்த ‘இஸ்லாமிய புரட்சிகர காவல்படை’யுடன் (IRGC) இவர் மிகவும் நெருக்கமான தொடர்பில் உள்ளார். ராணுவம் மற்றும் பொருளாதாரத்தில் IRGC-யின் ஆதிக்கம் அதிகம் என்பதால் மொஜ்தாபாவிற்கு ஆதரவு பெருக வாய்ப்புள்ளது. இருப்பினும், மதகுருமார்கள் வரிசையில் இவர் இன்னும் உயர் நிலையை எட்டவில்லை என்பது ஒரு குறையாகப் பார்க்கப்படுகிறது.
2. ஹசன் காமேனி (கொமேனியின் பேரன்):
ஈரான் இஸ்லாமியக் குடியரசைத் தோற்றுவித்த அயதுல்லா ருஹோல்லா கொமேனியின் பேரன் இவர். பாரம்பரியமான குடும்பப் பின்னணி இருந்தாலும், இவருக்குப் பாதுகாப்பு அமைப்புகளின் ஆதரவு குறைவாகவே உள்ளது. மேலும், அரசியல் அனுபவமும் இவருக்குக் கை கொடுக்கவில்லை.
3. அலிரேசா அரஃபி:
வல்லுநர் சபையின் துணைத் தலைவரான இவர், ஒரு மூத்த மதகுரு ஆவார். நிர்வாகத் திறமை மற்றும் கல்விப் புலமை கொண்டவர். மக்கள் மத்தியில் பெரிய செல்வாக்கு இல்லாவிட்டாலும், அதிகார மையங்களின் நம்பிக்கைக்குரியவராகத் திகழ்கிறார்.
4. ஹாஷேம் ஹொசைனி புஷேரி:
வல்லுநர் சபையின் முதன்மைத் துணைத் தலைவரான இவர், மறைந்த கமேனியுடன் நெருக்கமாக இருந்தவர். எனினும், இவருக்கு வாய்ப்புகள் குறைவு என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
ஈரானில் யாரை வேட்பாளராக நிறுத்த வேண்டும், யாரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பதில் ‘கார்டியன் கவுன்சில்’ அமைப்புக்குத் தான் உச்சபட்ச அதிகாரம் உள்ளது. கடந்த 2024 மார்ச் மாதத் தேர்தலில், முன்னாள் அதிபர் ஹசன் ரூஹானியையே தகுதி நீக்கம் செய்த பெருமை இந்த அமைப்புக்கு உண்டு. எனவே, அடுத்த உச்ச தலைவரைத் தீர்மானிப்பதில் இந்த அமைப்பின் ‘தணிக்கை’ மிக முக்கியப் பங்கு வகிக்கும்.
மேலும் யாரை அடுத்த தலைவராகத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்பதை வல்லுநர்கள் சபை ரகசியமாகவே வைத்துள்ளது. கமேனியின் மகனே அந்த இடத்தைப் பிடித்தால், அது ஈரானின் மதத் தலைமைத்துவத்தில் ஒரு புதிய வாரிசு அரசியலுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
