ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூரில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவ மனையில் புஷ்பம்மா (62) என்ற பெண்மணி கடந்த 4-ம் தேதி தொடை எலும்பு முறிந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவரை ஒரு வாரம் கண்காணிப்பில் வைத்திருந்த மருத்துவர்கள் நேற்று அறுவை சிகிச்சை செய்தனர். அறுவை சிகிச்சையின் போது தொடை பகுதியை வெட்டிய மருத்துவர்கள் திடீரென அதில் தையல் போட்டுவிட்டு சிகிச்சை அளிக்க முடியாது வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்று கூறியுள்ளனர்.

இது மூதாட்டியின் உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மருத்துவமனையின் கண்காணிப்பாளர் அருண்குமாரிடம் உறவினர்கள் புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில் அறுவை சிகிச்சையை பாதியில் நிறுத்தியதற்கான காரணத்தை மறுத்தவர்களிடம் கேட்டபோது எலும்புகள் வலுவில்லை என்று கூறியதாக உறவினர்கள் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கும் போது பாதியில் நிறுத்திவிட்டு வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்று அரசு மருத்துவமனை டாக்டர்கள் சொன்னது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.