ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் ‘ஆபரேஷன் ஃபதே-இ-ஜாங்’ என்ற பெயரில் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் அஜர்பைஜான் மீது தீவிர ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்தச் சூழலில், ஈரானின் மூத்த மதகுருவான ஆயத்துல்லா அப்துல்லா ஜவாடி அமோலி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக வன்முறைக்கு அழைப்பு விடுத்துள்ளது உலக நாடுகளை அதிரவைத்துள்ளது.
ஈரான் அரசுத் தொலைக்காட்சியில் பேசிய அவர், ஈரானின் ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதோடு, “அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலியர்களின் ரத்தம் சிந்தப்பட வேண்டும்” என ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
அடக்குமுறை செய்யும் அமெரிக்காவை எதிர்த்துப் போராட வேண்டும் என்றும், ட்ரம்ப்பின் ரத்தம் தனது தோள்களில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானில் மிகுந்த செல்வாக்கு மிக்க ஒரு மதகுருவிடமிருந்து வந்துள்ள இந்த நேரடி மிரட்டல், ஏற்கனவே பற்றி எரியும் போர் சூழலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
