இந்தியாவில் பல மாநிலங்களிலும் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. கோடை காலத்தில் அனைவரும் குளிர்ச்சியான இடத்தில் இருப்பதற்காக பெரும்பாலும் நகரங்களில் வசிப்பவர்கள் முதலில் ஏசி அறையில் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் நீண்ட நேரம் ஏசி ஓடினால் மின்கட்டணமும் தலைசுற்றும் அளவுக்கு வந்துவிடும். அதை எப்படி குறைப்பது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

நீங்கள் ஏசியை பயன்படுத்தும் போது சரியான வெப்ப நிலையில் வைத்திருக்க வேண்டும். அதாவது ஏசியை குறைவான வெப்பநிலையில் வைத்திருக்கக் கூடாது. பொதுவாகவே பலரும் ஏசியை 16 அல்லது 18 டிகிரியில் வைத்தால் நல்ல குளிர்ச்சி தரும் என்று நினைப்பார்கள். ஆனால் மனித உடலுக்கு உகந்த வெப்பநிலை 24 டிகிரி ஆகும். இந்த வெப்பநிலையில் ஏசியை வைத்தால் உங்களுடைய உடல் நிலை பாதிக்கப்படாமல் இருக்கும். அதுவும் நீங்கள் 24 டிகிரியில் வைத்தால் மின்சாரம் அதிகம் சேமிக்கப்படும். வெப்பநிலையை ஒரு டிகிரி உயர்த்தினால் ஆறு சதவீதம் மின்சாரம் சேமிக்க முடியும்.

நாம் ஏசியை ஆன் செய்வதற்கு முன்பு அறையின் ஜன்னல் மற்றும் கதவுகளை மூடி விட வேண்டும். இதனால் குளிர் காற்று வெளியே போகாமலும் அனல் காற்று உள்ளே வராமலும் தடுக்க முடியும். அப்படி செய்யவில்லை என்றால் உங்களுடைய ஏசி கடினமான உழைக்கும் பட்சத்தில் மின்சாரமும் அதிகம் தேவைப்படும். தற்போது பெரும்பாலான ஏசிகள் Sleep mode அம்சத்துடன் வருகின்றது. இதனால் 36 சதவீதம் மின்சாரத்தை சேமிக்க முடியும். உங்களுக்கு தேவையான குளிர்ச்சியை பெற்றவுடன் ஏசியை தானாகவே ஸ்லீப் மூடில் செல்ல செய்ய முடியும். ஏசியுடன் மின்விசிறியை பயன்படுத்தும் போது அது அறையின் ஒவ்வொரு மூலையிலும் ஏசி காற்றை செலுத்த உதவுகின்றது. இதனால் நீங்கள் ஏசி வெப்பநிலையை மிகவும் குறைவாக வைக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால் மின்சாரமும் அதிக அளவு சேமிக்கப்படும்.