மத்தியப்பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில், நள்ளிரவில் ஒரு இளம் பெண்ணுக்குத் தவறான எண்ணிலிருந்து வந்த அழைப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காவல் துறையில் தலைமைக் காவலராகப் பணியாற்றும் ஒருவர், அந்தப் பெண்ணைத் தொடர்பு கொண்டு, “உன் அம்மாவோடு பேச வேண்டும்” என்று வற்புறுத்தியுள்ளார்.
மேலும் அந்தப் பெண் அதற்கு மறுப்பு தெரிவித்து, தன் அம்மாவை எழுப்ப முடியாது என்று கூறியதால், ஆத்திரமடைந்த அந்த காவலர் அவரை மிகவும் அநாகரிகமான வார்த்தைகளால் திட்டியுள்ளார். இந்த அதிர்ச்சிகரமான உரையாடலின் ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி, காவல் துறையின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட காவலர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். காவல் துறையின் பொறுப்பிலுள்ள ஒரு அதிகாரி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குப் பதிலாக, நள்ளிரவில் இத்தகைய அத்துமீறல்களில் ஈடுபட்டது கடும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டியவர்களே சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு அராஜகமாக நடந்துகொள்வது, காவல்துறை மீதான மக்களின் நம்பிக்கையைச் சிதைப்பதாக சமூக ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர்.
