அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான நேரடிப் போரில் ஈடுபட்டு வரும் ஈரான், அண்டை நாடுகளான வளைகுடா நாடுகள் மீது நடத்திய தாக்குதலுக்கு தற்போது மன்னிப்பு கோரியுள்ளது. இது ஈரானின் தோல்வியைக் காட்டுகிறது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விமர்சித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் வளைகுடா நாடுகள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தியது. இதில் எண்ணெய் கிணறுகள், பொது இடங்கள் மற்றும் விமான நிலையங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின. குறிப்பாக, உலகமே வியந்து பார்க்கும் துபாய் சர்வதேச விமான நிலையமும் இந்தத் தாக்குதலுக்கு இலக்கானது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழலில், ஈரானிய அதிபர் மசூத் பெசாஸ்கியன் நேற்று  முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். வளைகுடா நாடுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அவர் மன்னிப்பு கோரியதுடன், “ஈரான் மீது அந்த நாடுகளிலிருந்து தாக்குதல் நடத்தப்படாத வரை, நாங்கள் இனி அவர்கள் மீது கை வைக்க மாட்டோம்” என்று உறுதியளித்துள்ளார்.

ஈரான் அதிபரின் இந்த மன்னிப்பு குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: “அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய இடைவிடாத தாக்குதல்களால் நிலைகுலைந்துள்ள ஈரான், தற்போது அண்டை நாடுகளிடம் சரணடைந்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளைக் கைப்பற்றி ஆள நினைத்த ஈரானின் கனவு தகர்ந்துவிட்டது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் ஈரான் சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். ஈரானின் இந்த மன்னிப்பிற்குப் பிறகு, வளைகுடா நாடுகள் எனக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும் டிரம்ப் கூறுகையில், “சனிக்கிழமை அன்று ஈரான் மிகக் கடுமையான பாதிப்புகளைச் சந்திக்கும். ஈரானின் மோசமான நடத்தையால், இதுவரை தாக்கப்படாத புதிய இலக்குகளும் தரைமட்டமாக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் நிபந்தனையற்ற சரணடைதலுக்கு டிரம்ப் அழைப்பு விடுத்திருந்த நிலையில், ஈரான் அதனைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது. “எங்கள் நாட்டைப் பாதுகாக்கத் தொடர்ந்து போராடுவோம்; ஒருபோதும் சரணடைய மாட்டோம்” என்று ஈரான் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.