அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், ஜோ பைடன் மற்றும் முன்னாள் ஐநா தூதர் நிக்கி ஹாலே ஆகியோரில் ஒருவரைக் கொலை செய்யத் திட்டமிட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசிப் ரஸா மெர்சண்ட், நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி, அமெரிக்காவிலிருந்து விமானம் மூலம் தப்பிச் செல்ல முயன்ற ஆசிப் ரஸா மெர்சண்ட் என்பவரைப் பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்தனர். அவர் மீது சர்வதேச பயங்கரவாதம் மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் புரூக்ளின் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

நீதிமன்றத்தில் ஆசிப் ரஸா அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:
“ஈரான் தலைநகர் தெஹ்ரானில் எனது குடும்பத்தினர் வசிக்கின்றனர். ஈரானின் புரட்சிகர காவல்படையினர் (IRGC) எனது குடும்பத்தினரைக் கடத்தி வைத்துக்கொண்டு, அமெரிக்காவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரைத் தீர்த்துக்கட்ட வேண்டும் என என்னை மிரட்டினர். இதற்காக அடியாட்களைத் தேடும் பணியில் நான் ஈடுபடுத்தப்பட்டேன். எனினும், நான் யாரையும் கொலை செய்ய விரும்பவில்லை; இந்த முயற்சியில் ஈடுபட்டால் கண்டிப்பாகப் பிடிபட்டுவிடுவோம் என்பது எனக்குத் தெரியும்.

காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் நோக்கில், ஈரான் இத்தகைய சதித் திட்டத்தைத் தீட்டியிருக்கலாம் எனப் புலனாய்வுத் துறையினர் சந்தேகிக்கின்றனர். ஏற்கனவே மத்திய கிழக்கு நாடுகளில் போர் சூழல் நிலவுகிறது. சமீபத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதனால் ஈரான் பதிலடித் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், அமெரிக்கத் தலைவர்களைக் கொல்ல நடந்த சதி குறித்த இந்த வழக்கு விசாரணை உலக நாடுகளிடையே பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

மேலும் இந்த வழக்கில் ஆசிப் ரஸா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு எதிராக நடந்த மிகப்பெரிய சதித் திட்டமாக இது பார்க்கப்படுகிறது.