ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் அமைந்துள்ள அரசு தொலைக்காட்சி மற்றும் ரேடியோ சேவைகளின் தலைமையக அலுவலகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் உலகளாவிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதல் நேரலை ஒளிபரப்பாகிய நிலையில், செய்தி வாசித்து கொண்டிருந்த பெண் ஊழியர் ‘சஹர் இமாமி’ அச்சத்தில் ஓடும் காட்சிகள் நேரடியாக உலகம் முழுவதும் வலைதளங்களில் பரவியுள்ளன. கடந்த சில நாட்களாகவே இஸ்ரேலால் அந்நாட்டு ஊடக அமைப்புகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் குறித்து வெளியான தகவல்களில், இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலால் ஸ்டுடியோ குலுங்கிய நிலையில் ஊழியர்கள் அனைவரும் அதிர்ச்சியுடன் வெளியேறினர். பயமுறுத்தும் இந்த தாக்குதலால் யாருக்கும்  சேதம் ஏற்படவில்லை என ஈரானிய ஊடகம் தெரிவித்துள்ளது.

ஆனால் மக்கள் மத்தியில் மிகுந்த பதட்டத்தை உருவாக்கியுள்ளது. இதன் காரணமாக தெஹ்ரானிலிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் மற்றும் அதிபர் நெதன்யாகு இருவரும் கருத்து தெரிவித்துள்ளனர். “மக்கள் மீது தாக்குதல் எங்களின் நோக்கமல்ல. ஆனால், ஈரான் தலைவர்கள் எங்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தாவிட்டால், முக்கிய இடங்களை நோக்கி தாக்குதலை தொடருவோம்” என பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதிபர் நெதன்யாகு கூறியதாவது, “அணுகுண்டு மற்றும் ஏவுகணை அச்சுறுத்தலை ஒழிக்கவே எங்கள் நடவடிக்கைகள் தீவிரமாகி வருகின்றன. இதுபோன்ற தாக்குதல்கள் தொடரும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, ஈரானில் பயின்றுவரும் இந்திய மாணவர்களும் இந்த தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது தெஹ்ரானிலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குவாம் நகருக்கு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

இந்திய தூதரகம் சார்பில் மாணவர்களின் பாதுகாப்புக்காக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், பெற்றோர்கள் மற்றும் மக்களுக்கு தற்காலிக நிம்மதி ஏற்பட்டுள்ளது.