மத்திய அரசு ஈரானில் தங்கியிருக்கும் இந்தியர்களுக்கு ஒரு முக்கியப் புதிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. ஈரானில் நிலவும் தற்போதைய போர்ச் சூழல் மற்றும் அமெரிக்காவின் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ தாக்குதலுக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட தற்காலிகப் போர்நிறுத்தத்தை முன்னிட்டு, இந்திய குடிமக்கள் அனைவரும் உடனடியாக ஈரானை விட்டு வெளியேறுமாறு தேஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும், பிராந்தியத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தலின்படி, ஈரானில் உள்ள இந்தியர்கள் தூதரகத்தைத் தொடர்பு கொண்டு, அவர்கள் பரிந்துரைக்கும் பாதுகாப்பான வழிகளை மட்டுமே பயன்படுத்தி வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் எந்தவொரு இந்தியரும் சுயமாக அல்லது தூதரகத்தின் ஆலோசனையின்றி சர்வதேச எல்லைகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும், அது ஆபத்தானதாக முடியலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிகளுக்காக பிரத்யேக தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளைத் தூதரகம் வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், அதிகாரப்பூர்வ தகவல்களைத் தொடர்ந்து கவனிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.