ஈரானின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயலான ‘தெற்கு பார்ஸ்’ (South Pars) மீது இஸ்ரேல் நடத்திய திடீர் தாக்குதல், தற்போது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “இனிமேல் தெற்கு பார்ஸ் மீது இஸ்ரேல் கை வைக்கக்கூடாது” எனத் திட்டவட்டமாக எச்சரித்துள்ளார். இந்தத் தளமானது ஒட்டுமொத்த உலகத்திற்கும் அடுத்த 13 ஆண்டுகளுக்குத் தேவையான எரிபொருளை வழங்கும் திறன் கொண்டது என்பதால், இதன் மீதான தாக்குதல் உலகப் பொருளாதாரத்தையே நிலைகுலையச் செய்யும் எனப் பார்க்கப்படுகிறது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்குப் பதிலடியாக ஈரான், கத்தாரின் எல்என்ஜி (LNG) நிலையங்களைத் தாக்கியுள்ளது விவகாரத்தை இன்னும் சிக்கலாக்கியுள்ளது.

​டிரம்ப் தனது பதிவில், “இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்காவிற்குத் தெரியாது” எனக் கூறி இஸ்ரேலைத் தனிமைப்படுத்தியுள்ளார். ஒருவேளை, எவ்விதத் தவறும் செய்யாத கத்தாரை ஈரான் மீண்டும் தாக்கினால், இஸ்ரேலின் உதவி தேவையே இல்லாமல் அமெரிக்காவே நேரடியாகத் தெற்கு பார்ஸ் வயலை இதுவரை கண்டிராத அளவுக்கு அழித்துவிடும் என அதிரடி வார்னிங் கொடுத்துள்ளார். “இஸ்ரேலும் அமெரிக்காவும் ஒரே நேர்க்கோட்டில்தான் பயணிக்கிறதா?” என்கிற கேள்வியை எழுப்பியுள்ள இந்தப் பதிவு, மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்களை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது. ஈரானின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இப்போதைக்கு அமைதி காப்பதாகவும், ஆனால் கத்தார் தாக்கப்பட்டால் தயங்க மாட்டேன் என்றும் டிரம்ப் கூறியுள்ளது உலக நாடுகளைத் திகைக்க வைத்துள்ளது.