லண்டன் மாநகரின் தூய்மையைப் பாதுகாக்கும் விதமாக அந்நாட்டு நீதிமன்றம் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை, தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. லண்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவர், பொது இடத்தில் வெற்றிலை பாக்கு (பான்) மென்றுவிட்டு, அதன் எச்சிலைச் சுவர்களில் துப்பியுள்ளனர். இதைக் கவனித்த உள்ளூர் அதிகாரிகள், பொது இடங்களை அசுத்தப்படுத்தியதாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த லண்டன் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட இருவருக்கும் சுமார் 3.44 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.

​பொது இடங்களைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்கிற சட்டத்தை மதிக்கத் தவறியதற்காகவே இந்த மிகப்பெரிய அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் சாதாரண விஷயமாகக் கருதப்படும் இந்தச் செயல், லண்டன் போன்ற நாடுகளில் எவ்வளவு பெரிய குற்றமாகக் கருதப்படுகிறது என்பதற்கு இந்தத் தீர்ப்பே சாட்சி. “நம்ம ஊருன்னு நினைச்சு அங்கயும் கைவரிசையைக் காட்டினா இப்படித்தான் நடக்கும்” என நெட்டிசன்கள் ஒருபுறம் கிண்டல் செய்தாலும், இது வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. இந்தச் சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் வியக்க வைத்துள்ளது.