மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் தன்னைத் தானே கடவுளாக அறிவித்துக்கொண்ட அசோக் காரத் என்ற சாமியார், பல பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் வணிகக் கப்பல் துறை அதிகாரியான இவர், ஒரு பெண்ணிடம் தன்னை ‘சிவன்’ என்றும், அவரை ‘பார்வதி’ என்றும் கூறி ஆசை வார்த்தை காட்டி மயக்கியுள்ளார்.
மேலும் மயக்க மருந்து கொடுத்து அந்தப் பெண்ணை வன்கொடுமை செய்ததோடு, அதனை ரகசியமாகப் படம்பிடித்து கடந்த மூன்று ஆண்டுகளாக மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண் துணிச்சலுடன் அளித்த புகாரின் பேரில், தற்போது இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.
இந்தக் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணைத் தவிர மேலும் பல பெண்கள் அசோக் காரத் மீது புகார் அளிக்க முன்வந்துள்ளனர். இந்த வழக்கை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவிற்கு கடந்த சில நாட்களில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் சாமியாரின் ஆசிரமத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். தற்போது வந்துள்ள புகார்கள் அனைத்தையும் தீவிரமாகச் சரிபார்த்து வரும் தனிப்படையினர், இந்த மோசடி மற்றும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
