இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டை, ஒருவரின் குடியுரிமையை உறுதிப்படுத்துவதோடு வாக்களிப்பதற்கும் மிக முக்கியமான ஆவணமாகத் திகழ்கிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் அடையாள அட்டை கையில் இல்லாதவர்கள் அல்லது தொலைத்தவர்கள், இப்போது எளிய முறையில் ஆன்லைன் வழியாக அதைப் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
இதற்கு இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான voters.eci.gov.in என்ற பக்கத்திற்குச் சென்று, ஏற்கனவே கணக்கு வைத்திருப்பவர்கள் லாக்-இன் செய்தும், புதிய பயனர்கள் மொபைல் எண் மூலம் பதிவு செய்தும் உள்ளே நுழைய வேண்டும்.
இதனால் உள்ளே நுழைந்ததும் ‘E-EPIC’ என்ற விருப்பத்தைத் தேர்வு செய்து, உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண் அல்லது படிவக் குறிப்பு எண்ணைப் பதிவிட வேண்டும். பின்னர் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபி எண்ணைச் சரிபார்த்த பிறகு, e-EPIC’ என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் டிஜிட்டல் வாக்காளர் அட்டையை பிடிஎஃப் வடிவில் பெற்றுக்கொள்ளலாம்.
இந்நிலையில் உங்கள் மொபைல் எண் வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே இந்த வசதியைப் பயன்படுத்த முடியும் என்பதால், இணைக்காதவர்கள் ‘படிவம் 8’-ஐப் பயன்படுத்தி முதலில் மொபைல் எண்ணைப் புதுப்பித்துக் கொள்வது அவசியமாகும்.
