இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை மட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த விலைவாசி உயர்வினால் அங்குள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு இலங்கை அரசு இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிடம் கடன் பெற்றுள்ளது. இதனிடையில் அந்நாட்டில் வரும் மார்ச் 9 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக தேர்தலுக்குத் தேவையான நிதியை ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வாக்குச்சீட்டு அச்சடிக்கவும், எரிபொருள் மற்றும் போலீஸ் பாதுகாப்புக்கு நிதி வழங்கவும் முடியாது என கருவூலம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது “பொருளாதாரம் நெருக்கடி காரணமாக வரும் மார்ச் மாதம் 9 ஆம் தேதி நடைபெறக்கூடிய தேர்தல் தள்ளி வைக்கப்படுகின்றது. மேலும் தேர்தல் நடத்தும் தேதி குறித்த அறிவிப்பு மார்ச் 3 ஆம் தேதி வெளியிடப்படும்” என கூறியுள்ளது.