தாய்லாந்தைச் சேர்ந்த 78 வயதான விவசாயி இன் சேண்டோங் என்பவர், வாழ்நாள் முழுவதும் மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து ஜூன் 13 அன்று உடல்நலக் குறைவால் காலமானார். விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்ட இவர், தனது பொருளாதார நிலை குறித்தோ, சேமிப்பு குறித்தோ யாரிடமும் காட்டியதில்லை. அவரது மறைவுக்குப் பிறகு, இறுதிச் சடங்கு செலவுகளுக்குக் கூட பணமில்லாமல் அவரது குடும்பத்தினர் தவித்து வந்தனர்.
இந்நிலையில், அவரது பிள்ளைகள் தந்தையின் பழைய இரும்புப் பெட்டியைத் திறந்து பார்த்தபோது, உள்ளே கட்டுக்கட்டாகப் பண நோட்டுகளும் தங்கச் சங்கிலியும் இருந்ததைக் கண்டு உறைந்து போயினர். அதன் மொத்த மதிப்பு 18.4 லட்சம் பாட் (தாய்லாந்து நாணயம்), அதாவது இந்திய மதிப்பில் சுமார் 60 லட்சம் ரூபாய் ஆகும்.
https://www.instagram.com/reel/DZwUm0VjECD/?utm_source=ig_embed&ig_rid=AHPuHUcUC0dTd3otA8uw9jB
ஆறு தசாப்தங்களாக (60 ஆண்டுகள்) அவருடன் வாழ்ந்த அவரது மனைவி டாயெங் மற்றும் மூத்த மகன் நெவென் ஆகியோர், தந்தை இவ்வளவு பெரிய தொகையைச் சேமித்து வைத்திருப்பார் என்று கனவிலும் நினைக்கவில்லை என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். வங்கியில் சேமிக்காமல், வீட்டில் உள்ள இரும்புப் பெட்டியிலேயே அவர் சிறுகச் சிறுகச் சேமித்த இந்தப் பணம், குடும்பத்தின் இக்கட்டான சூழ்நிலையில் பெரும் உதவியாக மாறியுள்ளது.
“அளவோடு செலவு செய்து, உழைத்துச் சேமிக்க வேண்டும், பகட்டான வாழ்க்கையைத் தவிர்க்க வேண்டும்” என்ற தனது கொள்கையை அவர் வாழ்ந்து காட்டியுள்ளார். மேலும் இந்த நெகிழ்ச்சியான சம்பவம், தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரையும் நெகிழ வைத்துள்ளது.
