உத்தரப் பிரதேசம் மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தின் ஹசன்பூர் பகுதியில், 32 வயதான பூஜா என்ற பெண், தனது செல்லப்பிராணியான பூனை இறந்த துயரத்தை தாங்க முடியாமல், இரண்டு நாட்களுக்குப் பின்னர் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பூஜா, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கணவரை விவாகரத்து செய்தார். பின்னர் தனது தாய் கஜ்ரா தேவியுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் தனிமையை சமாளிக்க, பூனை ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வந்தார். அது அவருக்கு மிக நெருக்கமாக இருந்தது. கடந்த வியாழக்கிழமை, அந்த பூனை இறந்தது.
பூனை இறந்த பின்னரும், பூஜா அதன் உடலை இரண்டு நாட்கள் அருகில் வைத்து, அதனை புதைக்க மறுத்தார். அவரது தாய் மற்றும் குடும்பத்தினர் பூனை உடலை புதைக்க வேண்டியது அவசியம் என அறிவுறுத்தினாலும், பூஜா அதை ஏற்கவில்லை. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு பின்னர் பூஜா தனது அறையில் தற்கொலை செய்து கொண்டார். அருகில் அவரது செல்லப்பிராணி பூனையின் உடலும் இருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
