தமிழக சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் பதிவாகியுள்ள 85 சதவீத வாக்குப்பதிவு தற்போது அரசியல் களத்தில் ஒரு பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு தமிழகம் கண்டிராத இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்குப்பதிவு உயர்வுக்குத் தாங்களே காரணம் என தமிழக வெற்றிக் கழகத்தினர் (தவெக) உரிமை கோரி வருகின்றனர்.

அரசியல் மீது ஈடுபாடு காட்டாத இளைஞர்களையும், பெண்களையும் தங்கள் கட்சியின் வருகை வாக்குச்சாவடிக்கு வரவழைத்துள்ளதாக அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். “மாற்றத்தை விரும்பும் புதிய வாக்காளர்களின் வரவு, தவெக-வின் வெற்றியை உறுதி செய்யும்” என்பது அக்கட்சியினரின் வாதம்.

இருப்பினும், தவெக-வின் இந்தக் கூற்றை திமுக திட்டவட்டமாக மறுத்துள்ளது. வாக்கு சதவீத உயர்வுக்குக் காரணம் புதிய வாக்காளர்களின் வருகையல்ல, மாறாக SIR (Special Intensive Revision) திட்டத்தின் கீழ் வாக்காளர் பட்டியலில் செய்யப்பட்ட சீர்திருத்தங்களே என்று திமுக தரப்பு விளக்கம் அளிக்கிறது. பட்டியலில் இருந்த போலி மற்றும் இடம் மாறிய வாக்காளர்கள் நீக்கப்பட்டதாலேயே சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த முறை பதிவான அதே எண்ணிக்கையிலான வாக்குகள் தான் இம்முறையும் பதிவாகியுள்ளன என திமுக நிர்வாகிகள் கூறுகின்றனர்.

இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, தவெக-வின் வாதத்தை நகைச்சுவையுடன் எதிர்கொண்டார். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள். அது அவர்களுக்குத் தான் சரியாகப் பொருந்தும். வாக்குப்பதிவு அதிகரித்ததற்கும் அவர்களின் வருகைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனத் தெரிவித்தார்.

மேலும், தவெக வெளியிட்டுள்ளதாகக் கூறப்படும் ‘அமைச்சரவை பட்டியல்’ குறித்த கேள்விக்கு, “இல்லாத ஊருக்குப் போகாத வழியைச் சொல்வது போல இருக்கிறது” எனப் பழமொழி மூலம் பதிலடி கொடுத்தார். சென்னை என்றும் திமுக-வின் கோட்டை என்பதில் மாற்றமில்லை என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

தேர்தல் நாளன்று சென்னை துறைமுகம் தொகுதியில் அமைச்சர் சேகர் பாபுவுக்கும், தவெக வேட்பாளர் சினோரா அசோக் ஆகியோருக்கும் இடையே ஏற்பட்ட நேரடி மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. திமுகவினர் தோல்வி பயத்தில் செயல்படுவதாகத் தவெக குற்றம் சாட்டிய நிலையில், அதனைத் தற்போது சேகர் பாபு திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

பொதுவாக அதிமுக – திமுக இடையே தான் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தவெக-வின் வரவு மற்றும் அவர்களின் தன்னம்பிக்கை, தற்போது திமுக – தவெக இடையிலான நேரடிப் போட்டியோ என்ற பிம்பத்தை உருவாக்கியுள்ளது. தவெக கூறுவது போல இளைஞர்களின் வாக்குகள் அவர்கள் பக்கம் திரும்பியிருந்தால், அது தேர்தல் முடிவுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். மேலும் எது எப்படியோ, மக்களின் தீர்ப்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முடக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதை வரும் தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கும்.