
சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் ஒரு 19 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் சேலம் அரசு மருத்துவமனையில் மருத்துவ படிப்பு சம்பந்தமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இதற்காக அவர் தினசரி அரசு மருத்துவமனைக்கு சென்று வந்த நிலையில் நேற்று இரவு பயிற்சி முடிந்ததும் வழக்கம்போல் தன்னுடைய விடுதி அறைக்கு திரும்பினார்.
இவர் இரவு 9.30 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மொபட்டில் வந்த ஒருவர் திடீரென இளம்பெண்ணிடம் பாலியல் ரீதியாக சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இளம்பெண் பயத்தில் கத்தி கூச்சலிட்டபடி அங்கிருந்து ஓடிய நிலையில் உடனடியாக அருகில் இருந்தவர்கள் வந்து அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது பெயர் சண்முகநாதன் என்பதும் அவருடைய வயது 45 என்பதும் தெரிய வந்தது. இவர் ஒரு ஜவுளி கடையில் ஊழியராக வேலை பார்க்கும் நிலையில் தள்ளுவண்டியில் வைத்தும் துணி வியாபாரமும் செய்து வந்துள்ளார்.
இவர் மது போதையில் தான் அந்த இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் இவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.