கர்நாடக மாநிலம் பெங்களூருவில், சில்க் போர்டு சாலை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளம்பெண்ணை, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்கள் துரத்திச் சென்று பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், பெங்களூரு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் இரவு 10 மணியளவில் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. பின்னால் வந்த காரில் பொருத்தப்பட்டிருந்த டேஷ் போர்டு கேமராவில் பதிவான அந்த வீடியோவில், ஒரே இருசக்கர வாகனத்தில் விதிகளை மீறி 3 இளைஞர்கள் பயணம் செய்வதும், அவர்களில் யாரும் ஹெல்மெட் அணியாததும் பதிவாகியுள்ளது.
Saw a girl being harassed by a group of guys for several kms on a main road, & this was before 10. I took a video as evidence and intervened in they immediately fled. @BlrCityPolice @blrcitytraffic pic.twitter.com/7cVrINuYug
— Abhinav Vasudevan (@abhyn0w) December 24, 2025
சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தூரத்திற்கு அந்த இளம்பெண்ணை 3 இளைஞர்களும் துரத்திச் சென்றதாக, வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட காரின் உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஆதாரத்திற்காக வீடியோவை பதிவு செய்துவிட்டு, அந்த இளைஞர்களை மடக்கிப் பிடிக்க முயன்றதாகவும், ஆனால் அவர்கள் தப்பிச் சென்றுவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சம்பவம் பெங்களூரு காவல்துறையின் கவனத்திற்குச் சென்றது. உடனடியாக போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி, சம்பந்தப்பட்ட இளைஞர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தினர். அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தின் உரிமையாளர் விவரம் கண்டறியப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகள் மீது விரைவில் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பெங்களூரு போலீசார் தெரிவித்துள்ளனர்
