நாகர்கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமன் நாயக் (40) என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் அவரது மனைவி பத்மா உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதாவது லட்சுமன் நாயக் – பத்மா தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பத்மா அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். லட்சுமன் நாயக், ரங்கா ரெட்டி மாவட்டத்தில் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த நிலையில், மனைவி தனியாக வசித்து வந்ததால் தனது பணியை ராஜினாமா செய்து அவருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில், அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வரும் கோபி என்பவருடன் பத்மாவுக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும், அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் லட்சுமன் நாயக்கிற்கு தெரியவந்ததைத் தொடர்ந்து, கள்ளக்காதலை கைவிடுமாறு அவர் மனைவியிடம் வலியுறுத்தி வந்துள்ளார். இதனால் கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த பிரச்னையை தீர்க்க லட்சுமன் நாயக்கின் உறவினர்கள் பலமுறை பஞ்சாயத்து செய்து சமாதானப்படுத்த முயன்றனர். இதனிடையே, மன அழுத்தத்தால் லட்சுமன் நாயக் மது பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனிடையே, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை தீர்த்துக்கட்ட வேண்டும் என பத்மா, தனது காதலன் கோபியிடம் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு, கோபி தனது தாய், தங்கை மற்றும் சகோதரருடன் பத்மாவின் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது தூங்கிக் கொண்டிருந்த லட்சுமன் நாயக்கின் வாயில் வலுக்கட்டாயமாக மது ஊற்றி, பின்னர் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மறுநாள் காலை, வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற பத்மா, கணவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றதாகவும், பின்னர் வீட்டின் உரிமையாளரை அழைத்து தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து வீட்டிற்கு வந்த அவர், கணவர் அதிக அளவில் மது குடித்து இறந்து கிடப்பதாக கூறி நாடகமாடியதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், லட்சுமன் நாயக்கின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரர் போலீசில் புகார் அளித்தார். விசாரணையின் போது பத்மா உள்ளிட்டோர் அளித்த வாக்குமூலங்களில் முரண்பாடு இருந்ததைத் தொடர்ந்து, பத்மாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், அவர் தனது கள்ளக்காதலன் கோபி மற்றும் அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து, பத்மா, கோபி, அவரது தாய், தங்கை, சகோதரர் ஆகிய 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மாணவர்களுக்கு ஒழுக்கம் குறித்து பாடம் கற்பிக்க வேண்டிய ஆசிரியை ஒருவர் இவ்வகை குற்றச்செயலில் ஈடுபட்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
