திருமணமான பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது அதிகரித்துள்ள நிலையில், சூரத்தில் தன்னைத் தொடர்ந்து சித்திரவதை செய்த கணவரை, பாலில் விஷம் வைத்தும், பின்னர் கழுத்தை நெரித்தும் கொலை செய்த மனைவியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

குஜராத் மாநிலம் சூரத் நகரில் வசித்து வருபவர் 37 வயதுடைய ஒரு பெண் (பெயர் குறிப்பிடப்படவில்லை). இவருடைய கணவர் (வயது 40), பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். அவர் மும்பையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த நிலையில், மாதம் ஒருமுறை சூரத்திற்கு வந்து தனது மனைவியுடன் தங்கிச் செல்வது வழக்கம்.

சூரத் வரும் நேரங்களில், கணவர் உடலுறவில் அதிக ஈடுபாடு கொள்வதற்காக வீரியம் தரும் மாத்திரைகளை உட்கொண்டு வந்துள்ளார். அதன் தாக்கம் காரணமாக இரவு முழுவதும் தனது மனைவியை இயற்கைக்கு மாறான முறையில் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அந்தப் பெண் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடும் பாதிப்புக்கு உள்ளானார். கணவரின் இத்தகைய செயலால் பலமுறை அவருக்குப் பிறப்புறுப்பில் காயம் ஏற்பட்டு ரத்தப்போக்கும் ஏற்பட்டுள்ளது.

கணவரின் சித்திரவதையைத் தாள முடியாத அந்தப் பெண், அவரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். கடந்த ஜனவரி 1-ஆம் தேதி, பாலில் எலி மருந்தைக் கலந்து கணவருக்குக் கொடுத்துள்ளார். ஆனால், அன்று அவர் உயிர் பிழைத்துவிட்டார். இதனைத் தொடர்ந்து, ஜனவரி 5-ஆம் தேதி கணவர் உடல்நலக்குறைவால் சோர்ந்து போயிருந்த நிலையில், அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

உயிரிழந்த கணவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற அந்தப் பெண், அவர் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதாக நாடகமாடினார். உடலைச் சொந்த ஊரான பீகாருக்குக் கொண்டு செல்லாமல், சூரத்திலேயே அடக்கம் செய்ய அவர் அவசரப்பட்டார். இதில் சந்தேகமடைந்த கணவரின் சகோதரர் போலீஸில் புகார் அளித்தார். பிரேதப் பரிசோதனையில், உடலில் விஷம் கலந்திருப்பதும், கழுத்து நெரிக்கப்பட்ட அடையாளங்களும் உறுதி செய்யப்பட்டன.

இதையடுத்து அந்தப் பெண்ணிடம் போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், கணவரின் பாலியல் சித்திரவதையால் அவரைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். போலீஸார் அந்தப் பெண்ணைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.