ஹரியானா மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், உயிரிழந்த மனைவியின் உடலை அவரது கணவர் ரிக்ஷாவில் வைத்து 7 கிலோமீட்டர் தூரம் சுமந்து சென்ற அவலம் அரங்கேறியுள்ளது.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி குங்குன், ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் அருகே உள்ள ஒரு  கிராமத்தில் வசித்து வருகிறார். ரிக்ஷா ஓட்டி பிழைப்பு நடத்தி வரும் இவரது மனைவி சுமித்ரா (35), கடந்த மூன்று மாதங்களாகக் காசநோயால் பாதிக்கப்பட்டு ஃபரிதாபாத்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி சுமித்ரா புதன்கிழமை மதியம் உயிரிழந்தார்.

மனைவியின் சிகிச்சைக்காகத் தனது வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் செலவழித்த குங்குன், சடலத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதி கோரியுள்ளார். ஆனால், அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி இல்லை என்ற பதில் கிடைத்துள்ளது. தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்களை அணுகியபோது, வெறும் 7 கிலோமீட்டர் தூரத்திற்கு 700 ரூபாய் வரை வாடகை கேட்டுள்ளனர். கையில் பணமில்லாத நிலையில், பல மணி நேரம் மருத்துவமனை வளாகத்திலேயே அவர் காத்திருந்துள்ளார்.

உதவிக்கு யாரும் வராத நிலையில், தான் பிழைப்புக்காகப் பயன்படுத்தும் ரிக்ஷாவிலேயே மனைவியின் சடலத்தை ஏற்றினார். 8 வயது மகன் ஒருபுறம் அழுதுகொண்டே வர, தனது மனைவியின் உடலைச் சுமந்தபடி 7 கிலோமீட்டர் தூரம் ரிக்ஷாவை மிதித்துச் சென்ற காட்சி காண்போரை ரத்தக் கண்ணீர் வடிக்க வைத்தது. வழியில் ஏராளமானோர் இதைப் பார்த்தபோதிலும், யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை.

இது குறித்து மருத்துவமனை துணை அறுவை சிகிச்சை நிபுணர் எம்.பி. சிங் கூறுகையில், “அரசு ஆம்புலன்ஸில் சடலங்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. அதற்கென செஞ்சிலுவைச் சங்கம் மூலம் பிணவறை வேன்கள் வழங்கப்பட வேண்டும். ஃபரிதாபாத்தில் அந்த வசதி இல்லை. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். மேலும் அரசு சுகாதார சேவைகளின் அவல நிலையை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை தோலுரித்துக் காட்டியுள்ளது.