இரண்டாம் உலகப் போர் முடிந்து 80 ஆண்டுகள் கடந்தாலும், அதன் மிச்சங்கள் இன்றும் உலகை அதிரவைத்து வருகின்றன. போர் முடிந்த பிறகு, பயன்படுத்தப்படாத சுமார் 16 லட்சம் டன் வெடிபொருட்களை ஜெர்மனி தனது பால்டிக் கடலில் கொட்டியது.

பல தசாப்தங்களாக கடலுக்கு அடியில் துருப்பிடித்துக் கிடக்கும் இந்த ஏவுகணைகள், டார்பிடோக்கள் மற்றும் குண்டுகள் தற்போது கடல்வாழ் உயிரினங்களின் சொகுசு வீடாக மாறியுள்ளன.

அந்தப் பகுதியில் ஆய்வு செய்த விஞ்ஞானிகள், நச்சு இரசாயனங்கள் நிறைந்த இடமாக இருக்கும் என்று நினைத்த நிலையில், அங்கு மீன்கள், நண்டுகள் மற்றும் நட்சத்திர மீன்கள் (Starfish) செழிப்பாக வளர்வதைக் கண்டு ஆச்சரியத்தில் உறைந்து போயுள்ளனர்.

கடலின் தரைப்பகுதியில் பாறைகள் குறைவாக இருப்பதால், இந்த உலோக வெடிகுண்டுகளையே தங்களின் வீடுகளாக மாற்றிக்கொண்டு உயிரினங்கள் வாழத் தொடங்கியுள்ளன.

இருப்பினும், இந்த வெடிகுண்டுகளில் இருந்து கசியும் டிஎன்டி (TNT) போன்ற நச்சுப் பொருட்கள் கடல் நீரை விஷமாக்கி வருவதாகவும், இது மீன்கள் வழியாக மனித உடலுக்குள் நுழைய வாய்ப்புள்ளதாகவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.