கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட தேர்தல் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் தொடர்பாக திமுக துணை பொதுச் செயலாளரும் மக்களவை எம்.பி.யுமான கனிமொழி தனது கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களோடு உடனடியாக நின்றது திமுக மற்றும் தமிழக அரசு. மக்களுக்காக ஆதரவாக இருக்க வேண்டிய நேரத்தில் வன்முறையை தூண்டும் வகையில் பேசுவது சரியல்ல. அவதூறு பரப்பக் கூடாது; குற்றம் சாட்டுவது தேவையில்லாத ஒன்று” என தெரிவித்தார்.
மேலும், “ஒரு தலைவர், ஒரு ஆறுதல் கூட சொல்லாமல் தன்னுடைய பாதுகாப்பை மட்டுமே நினைத்து அங்கிருந்து சென்றது இதுவரை நான் பார்த்ததே இல்லை. மக்கள் பாதுகாப்பை பற்றித்தான் யோசிக்க வேண்டும். அவர் செல்ல முடியாவிட்டாலும், இரண்டாம் கட்டத் தலைவர்கள் அல்லது தொண்டர்கள் மக்களை சென்று பார்த்திருக்க வேண்டும்.
ஆனால் அது கூட செய்யப்படவில்லை. இது மனிதாபிமானமே இல்லாத செயல். மேலும், புரட்சி வெடிக்க வேண்டும் என தவெகவைச் சேர்ந்த ஆதவ் அர்ஜூனா வெளியிட்ட பதிவு உச்சகட்டப் பொறுப்பின்மை. சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பொறுப்புடன் நடந்துகொண்டு, அமைதியை பேண வேண்டும்” எனக் கனிமொழி வலியுறுத்தினார்.
