சிங்கப்பூரில் வசித்து வரும் 39 வயதுடைய வெற்றிகரமான இந்தியப் பெண் வழக்கறிஞர் ஒருவரின் திருமண எதிர்பார்ப்புகள் குறித்து, பிரபல மேட்ச்மேக்கர் (திருமணத் தரகர்) ஒருவர் வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஆண்டுக்கு சுமார் ₹2 கோடி ரூபாய் சம்பாதிக்கும் அந்தப் பெண், கடந்த 12 வருடங்களாக (தனது 27 வயதிலிருந்து) வரன் தேடியும் இதுவரை தனக்கு ஏற்ற துணையை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.

ஆரம்பத்தில் தான் மிகவும் நெகிழ்வுத்தன்மையுடன் (Flexible) இருப்பதாகக் கூறிய அந்தப் பெண், பேச்சுவார்த்தை வளர வளர அடுக்கடுக்கான நிபந்தனைகளை விதித்தது மேட்ச்மேக்கரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ​அவர் விதித்த நிபந்தனைகளின்படி, மணமகன் ஏற்கனவே சிங்கப்பூரில் வசிப்பவராகவும், வட இந்தியராகவும், 42 வயதிற்கு உட்பட்டவராகவும், தோற்றத்தில் 10-க்கு 7 மதிப்பெண் பெறும் அளவு அழகானவராகவும் இருக்க வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் தன்னை விட அதிகமாக அல்லது சமமாக அதாவது ₹2 கோடிக்கு மேல் சம்பாதிப்பவராகவும், இதற்கு முன் திருமணமே ஆகாதவராகவும் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். “விவாகரத்தான நபரைத் திருமணம் செய்வீர்களா?” என்று கேட்டதற்கு, “என்னைப் பற்றி நாலு பேர் என்ன நினைப்பார்கள்?” என அவர் கோபமாக மறுத்துள்ளார்.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, “₹2 கோடி சம்பாதிக்கும் 42 வயது பிரம்மச்சாரி ஆண், ஏன் 39 வயது பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டும்?” என்றும், “அவரது எதிர்பார்ப்பில் தவறில்லை” என்றும் நெட்டிசன்கள் இருவேறு தரப்பாகப் பிரிந்து சமூக வலைத்தளங்களில் காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.