சீன அரசாங்கம் தனது குடிமக்களைக் கண்காணிக்க ‘சோஷியல் கிரெடிட்’ (Social Credit) என்ற பெயரில் ஒரு அதிரடித் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. இப்போது அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் ஒரு தனித்துவமான QR கோடைப் பொருத்தி வருகிறார்கள். யாராவது அந்த QR கோடை ஸ்கேன் செய்தால், அந்த வீட்டில் இருப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள், அவர்களின் ‘சமூகக் கடன் புள்ளிகள்’ (Social Credit Score) எவ்வளவு என்பதை உடனடியாகத் தெரிந்துகொள்ள முடியும்.

ஒரு நபர் அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருக்கிறாரா, விதிகளை மதிக்கிறாரா என்பதைப் பொறுத்து இந்தப் புள்ளிகள் வழங்கப்படும். மக்களை ஒரு “சிறந்த குடிமகனாக” மாற்றவே இந்தச் சமூகக் கடன் முறை கொண்டுவரப்பட்டதாகச் சீன அரசு வாதிடுகிறது. ஆனால், நடைமுறையில் இது மக்களின் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பறிக்கும் ஒரு வேலையாகப் பார்க்கப்படுகிறது.

உங்கள் புள்ளிகள் குறைந்தால், உங்களால் ரயில் டிக்கெட் எடுக்க முடியாது, வங்கி லோன் கிடைக்காது, ஏன்.. உங்கள் குழந்தைகளின் கல்வி கூடப் பாதிக்கப்படலாம். அரசாங்கம் ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் இப்படி ஒரு “ரேட்டிங்” முறையை வைப்பது, பக்கத்து வீட்டுக்காரர்களே ஒருவரையொருவர் உளவு பார்க்கும் நிலையை உருவாக்கிவிடும் என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.