கார்ப்பரேட் உலகில் மனிதநேயத்தை உணர்த்தும் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அங்கித் பாண்டே என்ற தொழிலதிபரின் நிறுவனத்தில் 10 ஆண்டுகளாகக் கணக்காளராகப் பணியாற்றிய ஊழியர் ஒருவர், திடீரெனத் தனது பணியை ராஜினாமா செய்ய வந்துள்ளார். அதற்கான காரணத்தைக் கேட்டபோது, தனது மகனுக்குக் கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவரோடு எஞ்சியிருக்கும் நாட்களைக் கழிக்க விரும்புவதாகவும் கண்ணீருடன் கூறியுள்ளார்
இதைக் கேட்டு நெகிழ்ந்த அந்த முதலாளி, ஊழியரின் ராஜினாமாவை ஏற்க மறுத்துவிட்டார். “உங்களது வேலை அப்படியே இருக்கும்; பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் உங்கள் மகனைக் கவனித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் விடுப்பில் இருக்கும் காலத்திற்கும் முழு சம்பளமும் உங்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்” என்று கூறி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். இந்த மனிதநேயமிக்க பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பலரையும் நெகிழ வைத்து, பாராட்டுகளைக் குவித்து வருகிறது.
