உத்தரப் பிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில், திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே மணப்பெண் தனது கணவருடன் வாழ மறுப்பு தெரிவித்ததால், இரு வீட்டாரும் பேசி விவாகரத்து செய்துகொண்ட வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.
அதாவது ஹமிர்பூர் மாவட்டம் ராத் பகுதியைச் சேர்ந்த தரம் சிங் குஷ்வாகா என்பவருக்கும், மிதிலேஷ் குமாரி என்ற பெண்ணுக்கும் பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டு முறைப்படி திருமணம் நடைபெற்றது. திருமணச் சடங்குகள் முடிந்து மணப்பெண் புகுந்த வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.
அன்று இரவு, மணமகன் தரம் சிங் குஷ்வாகா தனது அறைக்குள் சென்றபோது, மணப்பெண் மிதிலேஷ் குமாரி அவருடன் வாழ முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் மணப்பெண் தனது முடிவில் உறுதியாக இருந்தார்.
இது குறித்து மிதிலேஷ் குமாரி கூறுகையில், “நான் வேறொரு இளைஞரை உயிருக்கு உயிராகக் காதலித்து வருகிறேன். எனது விருப்பத்திற்கு மாறாக, பெற்றோர் வற்புறுத்தி எனக்குத் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு முன்பு இது குறித்துப் பேசியபோது என்னைத் தாக்கினர். அதனால் வேறு வழியின்றி திருமணத்திற்குச் சம்மதித்தேன். ஆனால் இப்போது என்னால் கணவருடன் வாழ முடியாது” எனத் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தால் மனவேதனை அடைந்த மணமகன் தரம் சிங் கூறுகையில், “இந்தப் பெண்ணுக்கு விருப்பம் இல்லை என்பதை திருமணத்திற்கு முன்பே சொல்லியிருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் இரு குடும்பங்களுக்கும் பொதுவெளியில் ஏற்பட்ட இந்த அவமானத்தைத் தவிர்த்திருக்கலாம்” என்றார்.
பிரச்சினை முற்றியதை அடுத்து, இரு வீட்டாரும் போலீஸ் நிலையத்தை அணுகினர். இன்ஸ்பெக்டர் ராகேஷ் சிங் முன்னிலையில் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. போலீஸார் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் மணப்பெண் சமாதானம் அடையவில்லை.
இறுதியில், இரு குடும்பத்தினரும் பேசி ஒருமனதாக விவாகரத்து செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து, முறைப்படி பிரிவதாக ஒப்புக்கொண்ட மணப்பெண், தனது பிறந்த வீட்டிற்குத் திரும்பிச் சென்றார். மேலும் திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே மணமகன் வீட்டில் இருந்து மணப்பெண் வெளியேறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
