உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில், திருமணமான மூன்றே நாட்களில் கணவன் மற்றும் புகுந்த வீட்டினருக்கு மயக்க மருந்து கலந்த டீ கொடுத்துவிட்டு, நகை மற்றும் பணத்துடன் மணப்பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட கணவர் சுனில் அளித்த புகாரின்படி, திருமணமான முதல் இரவிலேயே மணப்பெண் மோனிகா, கூர்மையான கத்தியைக் காட்டி தன்னைத் தொடக்கூடாது என சுனிலை மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன சுனில், அன்று இரவு முழுவதும் மனைவியிடம் நெருங்காமல் தள்ளியே அமர்ந்து நேரத்தைக் கழித்துள்ளார்.

திருமணமான மூன்றாவது நாள், வீட்டில் இருந்த அனைவருக்கும் மயக்க மருந்து கலந்த தேநீர் கொடுத்துவிட்டு, சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தை எடுத்துக்கொண்டு மோனிகா தப்பியோடிவிட்டார். மோனிகா தனது உறவுமுறைச் சித்தப்பா ஒருவருடன் சேர்ந்து இந்தத் திட்டத்தைத் தீட்டித் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.