ஆந்திர மாநிலம் அம்பேத்கார் கோனசீமா மாவட்டத்தில், காதலித்துத் திருமணம் செய்துகொண்ட துணி வியாபாரி, மணப்பெண்ணின் சகோதரர்களால் பாறாங்கல் தலையில் போட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது சூரியபிரகாஷ் (41) என்பவர் உள்ளூரில் துணி வியாபாரம் செய்து வந்தார். இவரும், சந்தியா என்பவரும் பள்ளிப் பருவத்திலிருந்தே காதலித்து வந்தனர். சந்தியா தற்போது ராயவரத்தில் துணை வட்டாட்சியராக (துணை தாசில்தார்) பணியாற்றி வருகிறார்.
வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்களது காதலுக்குச் சந்தியாவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதையும் மீறி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் முடிந்த கையோடு சூரியபிரகாஷ் தனது மனைவி சந்தியாவை அழைத்துக் கொண்டு வேம்பள்ளியில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றார். தங்கை வேறு சமூகத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்ததைக் கேள்விப்பட்ட சந்தியாவின் சகோதரர்களான சந்திரபால் மற்றும் கிரிபாபு ஆகியோர் கடும் ஆத்திரம் அடைந்தனர்.
நேற்று நள்ளிரவு சூரியபிரகாஷின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இருவரும், அவரை சரமாரியாகத் தாக்கினர். பின்னர், தப்பியோட முயன்ற சூரியபிரகாஷின் தலையில் பெரிய பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டனர். இதில் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் சூரியபிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
காலை மணக்கோலத்தில் இருந்த தனது கணவர் பிணமாகக் கிடப்பதைக் கண்டு சந்தியா கதறித் துடித்தார். இந்தச் செய்தி காட்டுத்தீ போலப் பரவிய நிலையில், அங்கு திரண்ட பொதுமக்கள் ஆத்திரமடைந்து கொலையாளிகளான சந்திரபால் மற்றும் கிரிபாபு ஆகியோரைப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
மேலும் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்த சகோதரர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆணவக்கொலையில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்தனர். காதல் திருமணம் செய்த மறுநாளே வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
