தன்னை காதலித்த இளைஞர் ஏற்கனவே திருமணமானவர் என்பதை அறிந்த இளம்பெண், ஆத்திரத்தில் அந்த இளைஞரின் பிறப்புறுப்பை அறுத்தெறிந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது டெல்லியில் உள்ள இந்து ராவ் மருத்துவமனைக்கு கடந்த 25-ஆம் தேதி இளைஞர் ஒருவர் பிறப்புறுப்பில் கடுமையான ரத்தக் காயங்களுடன் சிகிச்சைக்கு வந்துள்ளார்.

அவரது காயத்தின் தன்மையைக் கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகம், உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தது. போலீசார் நடத்திய விசாரணையில், காயம் அடைந்தவர் உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரைச் சேர்ந்த விஸ்ரஜித் (22) என்பதும், அவரது காதலியே இந்தச் செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

பாதிக்கப்பட்ட விஸ்ரஜித்துக்கும், டெல்லிதியில் வசித்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அமீனா என்ற பெண்ணுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காதல் இருந்து வந்துள்ளது. விஸ்ரஜித் தனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதை மறைத்து அமீனாவுடன் பழகி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி அமீனாவைச் சந்திக்க விஸ்ரஜித் டெல்லிக்கு வந்துள்ளார். இருவரும் ஒரே வீட்டில் தங்கியிருந்தபோது, விஸ்ரஜித்துக்கு திருமணமான தகவல் அமீனாவுக்குத் தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த அமீனா, விஸ்ரஜித்தை பழிவாங்கத் திட்டமிட்டுள்ளார்.

அன்று இரவு விஸ்ரஜித்துக்கு கொடுத்த பாலில் அமீனா போதை மருந்து கலந்துள்ளார். மயக்கமடைந்த விஸ்ரஜித்தின் பிறப்புறுப்பை நள்ளிரவில் கூர்மையான ஆயுதத்தால் அமீனா அறுத்துள்ளார். வலியால் துடித்த விஸ்ரஜித், அங்கிருந்து தப்பித்து மருத்துவமனைக்கு வந்துள்ளார். தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக விஸ்ரஜித் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார்  வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள அமீனாவை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் முன்பின் தெரியாதவர்களுடன் ஏற்படும் பழக்கம் இத்தகைய விபரீதங்களில் முடிவதாக போலீசார் எச்சரிக்கின்றனர்.

மேலும் காதலிப்பவர்கள் தங்களைப் பற்றிய உண்மைகளை மறைப்பதும், பின்னர் அது தெரியவரும்போது ஏற்படும் ஆத்திரத்தில் இத்தகைய வன்முறைச் செயல்கள் அரங்கேறுவதும் தொடர்கதையாகி வருவது கவலையளிப்பதாகச் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.