“வீட்டு வேலை செய்பவர்களின் சம்பளம் என்றால் சில ஆயிரங்கள் தான் இருக்கும்” என்ற பழைய கணக்கு இப்போது தவிடுபொடியாகி வருகிறது. ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர் வாங்கும் சம்பளத்திற்கு இணையாக, இப்போதெல்லாம் வீட்டு வேலை செய்பவர்கள் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டனர் என்பதை சாட்சி என்ற பெண் எக்ஸ் (X) தளத்தில் ஆதாரத்துடன் பகிர்ந்துள்ளார். ‘ஸ்நாபிட்’ (Snabit) போன்ற செயலிகள் மூலம் வீட்டு வேலைக்கு ஆட்களை அமர்த்தும் போது, அவர்களுக்கு மாதம் 40,000 ரூபாய் வரை வருமானம் கிடைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதாவது, ஒரு சாதாரண வீட்டு வேலை செய்பவரின் ஆண்டு வருமானம் சுமார் 4.8 லட்சத்தை நெருங்குகிறது.

​நவீன கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலையின்றி லட்சக்கணக்கான இன்ஜினியர்கள் தவித்து வரும் சூழலில், திறமை உள்ளவர்களுக்குத் பாரம்பரிய வேலைகளிலேயே நல்ல வருமானம் கிடைப்பதை இது காட்டுகிறது. பிரபல்யமான ‘டாலி சாய்வாலா’ (Dolly Chaiwala) எப்படி ஒரு பிராண்டாக மாறினாரோ, அதேபோல இப்போது ‘வேலையை விட வருமானமே முக்கியம்’ என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர். நமது கல்வி முறைக்கு இது ஒரு மிகப்பெரிய ‘எச்சரிக்கை மணி’ என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். “படிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், செய்யும் தொழிலில் காட்டும் நேர்த்தியும் திறமையும் தான் கைநிறையச் சம்பளத்தைத் தரும்” என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி!