ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் காளைகளும், மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் மூலமாக மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இனி இல்லை. உள்ளூர் வீரர்களும் காளைகளும் அதிக அளவில் பங்கேற்பதை உறுதி செய்ய, இந்த ஆன்லைன் பதிவு முறையை அந்தந்த மாவட்ட நிர்வாகங்களே முடிவு செய்து கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. இது கிராமப்புறங்களில் உள்ள காளை உரிமையாளர்களுக்கு ஒரு பெரிய நிம்மதியைத் தந்துள்ளதோடு, ‘சர்வர்’ பிஸியாகும் பிரச்சினையிலிருந்தும் அவர்களைக் காப்பாற்றியுள்ளது.
மேலும், ஜல்லிக்கட்டுப் போட்டிகளின் போது வீரர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், அரசு சார்பில் உரிய நிவாரணம் வழங்கப்படுவதால், “ஆயுள் காப்பீடு” (Life Insurance) கட்டாயம் என்ற விதியும் இப்போது தளர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், ஜல்லிக்கட்டு போட்டி நடத்துபவர்கள் இதுவரை முத்திரைத் தாளில் (Stamp Paper) சமர்ப்பித்து வந்த உறுதிமொழிப் பத்திர நடைமுறையும் இனி கிடையாது என ரத்து செய்யப்பட்டுள்ளது.
போட்டிகளில் அதிகக் காளைகளை அடக்கும் வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசு வேலை (கால்நடை பராமரிப்புத் துறை) மற்றும் அலங்காநல்லூரில் ₹2 கோடி செலவில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான சிகிச்சை மற்றும் பயிற்சி மையம் எனத் தமிழர்களின் வீர விளையாட்டை ஊக்கப்படுத்த முதல்வர் அடுத்தடுத்து மாஸ் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இந்தத் தளர்வுகள் மூலம் வரும் ஜல்லிக்கட்டு சீசன் இன்னும் உற்சாகமாகவும், தடங்கல்கள் இல்லாமலும் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
