தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) சார்பில் நடைமுறையில் உள்ள காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தில் ஏற்படும் முறைகேடுகளையும், தவறுகளையும் தடுக்கும் விதமாக, ‘கியூ.ஆர் கோடு’ (QR Code) முறையை அறிமுகப்படுத்த டாஸ்மாக் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதன்படி, மதுபான ஆலையிலிருந்தே ஒவ்வொரு பாட்டிலுக்கும் பிரத்யேகமாக லேபிளில் கியூ.ஆர் கோடு அச்சிடப்பட்டு வழங்கப்பட உள்ளது.
இந்த புதிய முறையின் மூலம், வாடிக்கையாளர்கள் மதுபாட்டிலை எந்த டாஸ்மாக் கடையில் வாங்கினார்களோ, அதே கடையில் மட்டுமே அந்தப் பாட்டிலின் கியூ.ஆர் கோடை ஸ்கேன் செய்து திரும்பப் பெறும் முறை உறுதி செய்யப்படும். இதன் மூலம், பாட்டில்கள் வேறு கடைகளுக்குக் கொண்டு சென்று திரும்ப அளிப்பதன் மூலம் நடக்கும் குளறுபடிகள் தவிர்க்கப்பட்டு, காலி பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் மேலும் வெளிப்படையாகவும் திறம்படவும் செயல்பட வழிவகுக்கும் என்று டாஸ்மாக் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
