திமுக எம்எல்ஏவும் மருத்துவருமான எழிலன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, முதல்வரின் மருந்தகம் என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் முதல்வர் மருந்தகம் திறக்கப்பட உள்ளது. விலைவாசி உயர்வால் தமிழக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இருதய பலவீனம் மற்றும் ரத்த கொதிப்பு உள்ளிட்ட பாதிப்புகளால் தினமும் மாத்திரை சாப்பிட வேண்டிய சூழல் உள்ளது. இதற்காக அதிக தொகையும் செலவு செய்யப்படுகின்றது. அதனை குறைக்கும் விதமாக இந்த திட்டம் கொண்டுவரப்படுகின்றது.
மருந்து கடைகளில் மருந்து வாங்கக்கூடிய மக்கள் பலரும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த சுமையை குறைக்கும் நோக்கத்தில் முதல்வர் மருந்தகம் திறக்கப்படுகின்றது. இந்த மருந்தகங்களில் 75 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை குறைந்த விலையில் மருந்துகளை மக்கள் பெற்றுக் கொள்ளலாம். சர்க்கரை நோய்க்கான metformin மாத்திரை தனியார் மருந்தகங்களில் ஒரு அட்டை 70 ரூபாய்க்கும் மத்திய அரசின் மருந்தகங்களில் 30 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் தமிழக அரசின் முதல்வர் மருந்தகங்களில் இனி 11 ரூபாய்க்கு கிடைக்கும். இதன் மூலமாக மாதம் மாத்திரைகளுக்கு செலவு செய்யும் தொகை மக்களுக்கு குறையும். இந்த திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எழிலன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
