ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி, உலக நாடுகளின் முக்கிய கடல் வழிப்பாதையான ஹார்முஸ் நீர்ச்சந்தி இனி அனைத்து வர்த்தகக் கப்பல்களுக்காகவும் “முழுமையாகத் திறக்கப்படும்” என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே ஏற்பட்டுள்ள 10 நாள் தற்காலிகப் போர் நிறுத்தத்தை ஒட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் இந்தச் செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், இனி ஒருபோதும் இந்த கடல் பகுதியை ஈரான் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தாது என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 10 சதவீதம் வரை அதிரடியாக சரிந்துள்ளது.
அதே சமயம், ஈரானுடனான ஒப்பந்தங்கள் முழுமையாக முடியும் வரை அமெரிக்காவின் கடற்படை முற்றுகை தொடரும் என்றும் டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார். லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா எடுத்து வரும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த முன்னேற்றம் பார்க்கப்படுகிறது. இந்த நீர்ச்சந்தி திறக்கப்பட்டதை பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் வரவேற்றுள்ளன.
இருப்பினும், இந்தத் திறப்பு தற்காலிகமாக இல்லாமல் நிரந்தரமானதாக இருக்க வேண்டும் என்று அந்த நாட்டுத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். கடல் வழிப் பாதுகாப்பை உறுதி செய்ய சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயல்படப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
