தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று எடப்பாடி பழனிச்சாமி உடன் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி பாஜகவுக்கு 23 சீட்டு பாமகவுக்கு 23 சீட்டு பிற கட்சிகளுக்கு 18 சீட்டு ஒதுக்கப்பட்டதாகவும் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் எடப்பாடி பழனிச்சாமி கூறப்பட்டதாக தகவல் வெளிவந்த நிலையில் இதனை நயினார் நாகேந்திரன் மறுத்தார்.

இந்த நிலையில் முன்னதாக பாஜக நிர்வாகிகளை சந்தித்து பேசிய பியூஸ் கோயல் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் குறித்து விமர்சிக்க கூடாது என அறிவுறுத்தியதாக தகவல் வெளிவந்துள்ளது. கட்சி தொடங்கிய போதே தங்களின் கொள்கை எதிரியாக பாஜகவை விஜய் அறிவித்த நிலையில் திமுகவை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில் சிறுபான்மையினர் வாக்குகளை பிரிக்க விஜய் உதவுவார் என்பதால் அவருக்கு எதிராக சமூக வலைதளங்களிலோ அல்லது செய்திகளிலோ விமர்சிக்க கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். மேலும் விஜய் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணையாவிட்டாலும் அவர் சிறுபான்மை வாக்குகளை பிரிக்க உதவுவார் என்பதால் அவருக்கு எதிராக விமர்சனம் செய்யக்கூடாது என அறிவுறுத்தியதாக தகவல் வெளிவந்துள்ளது.