தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை பயன்படுத்தியதால் மத்திய பிரதேச மாநிலத்தில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல், புதுச்சேரி மாநிலத்தில் போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டது கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நாடு முழுவதும் போலி மற்றும் தரமற்ற மருந்துகளை பயன்படுத்துவதால் பொதுமக்கள் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுக்கு உள்ளாகி வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. இதுபோன்ற மருந்துகள் தொடர்பாக இதுவரை 104 என்ற உதவி எண்ணின் வாயிலாக மட்டுமே பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகள் மற்றும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் எளிதில் புகார் அளிக்க புதிய செயலியை தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் உருவாக்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மருந்து தொடர்பான புகார்களை பதிவு செய்யும் வகையில் ‘கியூஆர்’ (QR) குறியீடு உருவாக்கப்பட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து மருந்தகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த ‘கியூஆர்’ குறியீடுகளை, அனைத்து மருந்தகங்களின் முகப்பிலும் பொதுமக்கள் எளிதில் பார்க்கும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும் என தமிழக மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம், மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகள், உடல்நல பாதிப்புகள் உள்ளிட்டவை குறித்து பொதுமக்கள் நேரடியாக புகார் அளிக்க முடியும். இந்த புதிய முறையால், போலி மற்றும் தரமற்ற மருந்துகள் மீது விரைவான நடவடிக்கை எடுக்க உதவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
