ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில், தமிழக வெற்றி கழகம் (த.வெ.க.) சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரசார வாகனத்தில் ஏறி நின்று பேசிய த.வெ.க. தலைவர் விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசுகையில்,
“எம்.ஜி.ஆர். அவர்களும், ஜெயலலிதா அவர்களும் ஒரே வார்த்தையை தொடர்ந்து சொல்லி திமுகவை அரசியல் ரீதியாக காலி செய்தார்கள்.
அப்போது நான் கூட, ஏன் இவ்வளவு ஆக்ரோஷமாக திமுகவை விமர்சிக்கிறார்கள் என்று யோசித்திருக்கிறேன். இப்போது தான் அது புரிகிறது. எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் சொன்ன அதே வார்த்தையை இன்று நான் மீண்டும் சொல்கிறேன். திமுக ஒரு தீய சக்தி. திமுக ஒரு தீய சக்தி. திமுக ஒரு தீய சக்தி. இந்த தேர்தல், தூய சக்தியான த.வெ.க.வுக்கும், தீய சக்தியான திமுகவுக்கும் இடையேயான போட்டியே,” என்று ஆக்ரோஷமாக முழங்கினார்.
இந்த கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்து, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் (கொமதேக) பொதுச் செயலாளர் ஈஸ்வரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “தமிழ்நாட்டில் திமுகவை தோற்கடிக்க விஜய் முயற்சிப்பதாக நான் நினைக்கவில்லை. அவர் முயற்சி செய்வது, அதிமுகவின் அரசியல் இடத்தை கைப்பற்றுவதற்காகத்தான். விஜயை பார்த்து பயப்பட வேண்டியது திமுக அல்ல; அதிமுக தான்,” என்று தெரிவித்தார். இந்த கருத்து, எதிர்க்கட்சிகளுக்குள் புதிய அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது
