கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் விழா வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், நேற்று நடைபெற்ற 28-ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த்,
திருநெல்வேலி மக்களவை உறுப்பினர் ராபர்ட் புரூஸ், விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் தாரகை கத்பட், கிள்ளியூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேஷ் குமார் உள்ளிட்ட காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த நிகழ்ச்சியை காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில், தமிழக வெற்றிக் கழக (தவெக) மூத்த நிர்வாகி அருண் ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், தவெக தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா கேக் வெட்டி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், சமீபத்திய அரசியல் சூழல் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

“கரூரில் நடந்த சம்பவத்தில் எங்கள் தலைவர் விஜய் மீது கொலைப்பழி சுமத்த முயற்சி செய்யப்பட்டது. இயேசுநாதரை சிலுவையில் அறைந்து, அவர் மீது கொலைப்பழி சுமத்த சதி செய்தது போலவே, ஒரு தூய உள்ளம் கொண்ட எங்கள் தலைவர் மீது பழி சுமத்த முயன்றனர்” என அவர் கூறினார்.

மேலும், “அந்த விவகாரம் வெளிவந்ததும், முதல் தொலைபேசி அழைப்பு வந்தது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடமிருந்து. அதனால் தான் முதலமைச்சர் ஸ்டாலின் பதற்றமடைந்தார். டெல்லி முதல் தமிழகம் வரை பல தலைவர்கள் தொடர்பு கொண்டனர். இதன் மூலம், தமிழ்நாட்டின் அரசியல் எதிர்காலம் எங்கள் தலைவர் விஜய் என்பதைக் பாஜக  உணர்ந்துவிட்டது” என தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், “எங்கள் தலைவருக்கு மக்கள் வலிமை இல்லை என சிலர் கேள்வி எழுப்பினார்கள். ஆனால், 55 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையன் தவெகவில் இணைந்திருப்பது, விஜயின் அரசியல் வலிமைக்கு சான்றாகும். அவர் விரும்பியிருந்தால் பாஜகவில் இணைந்து ஆளுநராகவோ, மத்திய அமைச்சராகவோ, அல்லது திமுகவில் அமைச்சர் பதவி பெறவோ முடியும்.

அதை விடுத்து இங்கு வந்ததற்கு காரணம் – விஜயே தமிழ்நாட்டின் அரசியல் எதிர்காலம் என்பதை அவர் உணர்ந்ததுதான்” என கூறினார். மேலும், “எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரை பார்த்த அரசியல் அனுபவம் கொண்டவர்கள் விஜயை பார்த்து வருகிறார்கள் என்றால், அவரே அடுத்த தலைமுறை தலைவர் என்பது உறுதி. இன்னும் பலர் தவெகவில் இணையத் தயாராக உள்ளனர். விரைவில் அதிமுக கூடாரம் நிலைத்திருக்குமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது” என ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார். இந்த பேச்சு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.