பிரபல பாலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மா கடந்த 2008-ம் வருடம் ரப் நே பனா தி ஜோடி என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர். இதையடுத்து அமீர்கானுடன் நடித்த பிகே எனும் படத்தின் வாயிலாக பெரிய அளவில் பிரபலமானார். மேலும் தயாரிப்பாளராகவும் உருவெடுத்த அனுஷ்கா, 2017-ல் கிரிக்கெட் வீரர் விராட் கோலியை திருமணம் செய்துகொண்ட பின் அவ்வப்போது படங்களில் நடித்து வருகிறார்.

இப்போது கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் சக்தா எக்ஸ்பிரஸ் எனும் படத்தில் நடித்து வருகிறார் அனுஷ்கா. அண்மையில் அனுஷ்கா பேட்டி ஒன்றில் கூறியதாவது, “திரையுலகில் நடிப்பதை மிகவும் ரசிக்கிறேன். அதேசமயம் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கும் சமஅளவில் நேரத்தை செலவிட ஆசைப்படுகிறேன்.

குறிப்பாக குடும்பம் மற்றும் குழந்தை வளர்ப்பிலும் அதிக கவனம் செலுத்தப்போகிறேன். இதன் காரணமாக இனி முன்பு நடித்தது போல் அதிக படங்களில் நடிக்கப்போவதில்லை. ஆண்டுக்கு 1 படத்தில் மட்டுமே நடிக்கப்போகிறேன்” என அனுஷ்கா தெரிவித்திருக்கிறார்.