சீன விஞ்ஞானிகள் மரபணு மாற்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சதைப்பகுதியில் முட்கள் இல்லாத புதிய வகை மீன்களை உருவாக்கி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். பொதுவாக மீன் சாப்பிடும்போது அதன் மெல்லிய முட்கள் தொண்டையில் சிக்கிக்கொள்ளும் என்ற பயம் பலருக்கு உண்டு; குறிப்பாகக் குழந்தைகளுக்கு மீன் கொடுக்கும்போது பெற்றோர் மிகுந்த கவலைப்படுவார்கள்.
மேலும் மக்களின் இந்த அச்சத்தைப் போக்கும் வகையில், சீன அறிவியல் அகாடமியின் விஞ்ஞானிகள் ‘கிபெல் கார்ப்’ என்ற மீன் வகையிலிருந்து, முட்கள் உருவாவதற்குக் காரணமான குறிப்பிட்ட மரபணுவை தொழில்நுட்பத்தின் மூலம் நீக்கியுள்ளனர். இந்த மரபணு மாற்றத்தால் மீனின் சுவையிலோ அல்லது அதன் ஆரோக்கியத்திலோ எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மீனின் நீச்சல் திறனுக்கு அவசியமான முதுகெலும்பு மட்டும் அப்படியே இருக்க, சதையில் இருக்கும் 80-க்கும் மேற்பட்ட சிறிய வடிவ முட்கள் மட்டும் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன. இந்தத் தொழில்நுட்பம் மீன் வளர்ப்புத் துறையில் ஒரு மிகப்பெரிய புரட்சியாகக் கருதப்படுகிறது. இனி வருங்காலங்களில் மக்கள் எவ்வித அச்சமும் இன்றி மீன் உணவை முழுமையாக ரசித்து உண்ண முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
