அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் போர் பதற்றம் தற்பொழுது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஈரான் அனுப்பிய போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக நிராகரித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்க ராணுவ தளபதிகள் டிரம்ப்புடன் நடத்திய 45 நிமிட ஆலோசனைக்குப் பிறகு, இஸ்ரேலுக்கு மிகப்பாரிய அளவில் ராணுவ உதவிகளை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 6,500 வெடிபொருட்கள் மற்றும் நவீன ராணுவ தளவாடங்களை அமெரிக்கா இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளது.

ஈரானுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் அமெரிக்கா எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை, மத்திய கிழக்கு பகுதியில் ஒரு மிகப்பெரிய போர் வெடிக்கும் என்ற அச்சத்தை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவல்படி, கடந்த வாரத்தில் அமெரிக்காவிலிருந்து இரண்டு பிரம்மாண்ட சரக்குக் கப்பல்கள் மற்றும் ஏராளமான விமானங்கள் மூலமாக இந்த ஆயுதங்கள் இஸ்ரேலை வந்தடைந்துள்ளன.

இதில் வெடிமருந்துகள் மட்டுமின்றி, ராணுவ டிரக்குகள் மற்றும் நவீன போர் வாகனங்களும் அடங்கும். ஈரான் உடனான பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்படாத நிலையில், அமெரிக்கா இவ்வாறு ஆயுதங்களைக் குவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்காவின் இந்தத் தீர்மானமான நகர்வுகள், வரும் நாட்களில் போரின் போக்கை மாற்றக்கூடும் என்பதால் உலக நாடுகள் கவலையுடன் நிலைமையைக் கவனித்து வருகின்றன.