பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் இடையே புதியதாக ஒரு முக்கியமான பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், இவ்விரு நாடுகளுள் எதாவது ஒரு நாட்டின் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல், இரு நாடுகளையும் சேர்த்த ஒரு தாக்குதலாகவே கருதப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம், வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பான நேட்டோ (NATO) ஒப்பந்தத்தை ஒத்ததாக அமைந்துள்ளதால், சர்வதேச சமூகத்தின் கவனத்தை பெறுவதாக உள்ளது. குறிப்பாக, சமீபத்தில் கத்தாரில் உள்ள ஹமாஸ் அலுவலகங்கள் மீது இஸ்ரேலின் விமான தாக்குதல் நடைபெற்ற பின்னணியில், இந்த ஒப்பந்தத்தில் சவுதி அரேபியா கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்தியா – பாகிஸ்தான் இடையே அண்மையில் ஏற்பட்ட ராணுவ மோதல், பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த சூழலில், பாகிஸ்தான் மீது இந்தியா எதிர்காலத்தில் தாக்குதல் நடத்தினால், அதற்கு பதிலாக இந்தியா மீது சவுதி அரேபியா தாக்குதல் நடத்தும் வாய்ப்பு உருவாகி இருக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசும் இந்த ஒப்பந்தத்தை தீவிரமாக கவனித்து வருகிறது. இதுகுறித்து வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தான்-சவுதி அரேபியா இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தம், இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கும், பிராந்திய மற்றும் உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பதை நாங்கள் ஆய்வு செய்து வருகின்றோம். மேலும் தேசிய நலன்களைப் பாதுகாக்கவும் உறுதி செய்யவும் அரசு உறுதிபூண்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
